Wednesday, October 14, 2009

நான் இரசித்த கவிதை - அம்மா!

மேல் சட்டை போடாம
உன்காலடி சுத்தி வந்த
கணமெல்லாம் மறக்கலையே !

நாலாம் வகுப்புல
நாள்முடிச்சு வரும்போது
ஒத்தரூபா பணம்தந்து
வாழைப்பழம் வாங்கித்தந்த …

ஆறாம் வகுப்புல
அம்மையில படுத்தபோது
உப்பில்லாப் பண்டத்தை
அழுதுட்டே ஊட்டிவிட்ட …

பத்துப்பேர் பரிமாறும்
சிறந்தவகை உணவுகூட
நீ பேசிகிட்டே சுட்டுபோடும்
தோசை போல இல்லையம்மா …

விமானப் பயணமும்
பஞ்சுமெத்தை உறக்கமும்
பரதேசி எனக்கு
நீ போட்ட பிச்சையம்மா…

உன்னருகாமை இல்லாம
விம்பி விம்பி அழுதுகிட்டே
இழந்துவிட்ட உன்மடி சுகத்தை
ஏக்கமாய் நோக்குதம்மா ..

ஒவ்வொரு நொடியையும்
ஓடி ஓடி துரத்தி விட்டேன்
போகின்ற நொடியெல்லாம்
நான் வாழறதா நினைக்கலையே ..

எந்த நொடி நான் மறக்க
ஏறி வந்த ஏணியெல்லம்
உன் எழும்பால ஆனதுவே ..

இணையத்தில் நான் இரசித்த கவிதையிது. எழுதியவர் தெரியவில்லையெனினும், எழுதியவன் தாய்மையை உணர்ந்தவன் என்பது மட்டுமல்ல, அவன் வெளி தேசத்தில் இருக்கிறவன் என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

No comments: